Monday 10 June 2013

எம் பாடசாலைச் சிறுவருக்கு நாம் பொருத்தமான பெற்றோராக இருக்கின்றோமா? பெற்றோருக்கு ஒரு சுய சோதனை





பாடசாலைசெல்லும் வயதுடைய சிறுவரை வழி நடத்துவது என்பது அதிகமான பெற்றோருக்கு ஒரு சவாலாகவே அமைகிறது.  அவர்களுடைய அதிகரித்து வரும் சுதந்திர உணர்வும் எண்ணிக்கையில் அதிகரித்துக் கொண்டே போகும் நண்பர் வட்டமும் கல்விச் செயற்ப்பாட்டில் காட்டுகின்ற நிரந்தரமற்ற முன்னேற்றமும் பெற்றோரை அதிகம் பயமுறுத்துகின்றன.
   “ என் பிள்ளை ஏன் எனக்குப் பொய் சொல்கின்றது?”
   “ என் பிள்ளை திடீரென ஏன் குறைவான மதிப்பெண்கல் பெறுகின்றது?”
   “ என் பிள்ளை ஏன் எனக்கு அமைச்சலாக இருப்பது இல்லை?”
என எண்ணிலடங்காத கேள்விகள் பெற்றோர் மனதில் எழுகின்றன.  இவ்வாறான பெற்ரோரின் கேள்விகளில் ஒரு பொதுத் தன்மையை அவதானிக்க முடியும். இவ்வினாக்கள் எல்லாம் பிள்ளைகளைப் பற்றி அமைந்திருக்கின்றனவே அல்லாமல் பெற்றோரைப் பற்றி அமையவில்லை

ஒரு கணம் பெற்றோர் தம்மைப் பற்ரிய கேள்விகளை தமக்குத் தாமே தொடுக்கும் போது அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்பது அவர்களுக்கு இலகுவாக இருக்கும்.

   “நான் என்னுடைய பிள்ளைகளுடன் சேர்ந்து மதிய அல்லது இரவு உணவு அருந்துகின்றேனா?”
   “அவர்கள் தம்முடைய வெளியுலக அனுபவங்களை ஆவலாகக் கூற வரும் போது அக்கறையுடன் செவி மடுக்கின்றேனா?”
   “அவர்களுடன் சேர்ந்து காலாற நடக்கின்றேனா அல்லது மிதிவண்டிச் சவாரி செய்கின்றேனா?”
   “வீட்டு வேலைகள் செய்வதில் ( சமையல் வேலை, தோட்ட வேலை, வீடு சுத்தம் செய்தல்) அவர்களுடைய உதவியைப் பெறுகின்றேனா?”
   “வீட்டுச் சூழலுக்குப் பொருத்தமான மாலை 6 மணிக்கு முன் வீடு திரும்ப வேண்டும் போன்ற சிறு சிறு சட்டதிட்டங்களை வகுத்திருக்கின்றேனா?”
   “ அவர்களுடைய வகுப்பு ஆசிரியரை அடிக்கடி சந்தித்து பிள்ளைகளின் குறை நிறைக்களைப்பற்றி  உரையாடுகின்றேனா?”
   “அவர்களுடைய பாடசாலை வீட்டுப் பாடங்கள் வேலைத்திட்டங்களில் உதவி செய்கின்றேனா?”
   “அவர்களின் பாடசாலை நண்பர்களுடன் எனக்கு நல்ல தொடர்பு இருக்கின்றதா?”
   “அவர்களின் பாடசாலை நண்பர்களை மதிய உணவிற்கோ அல்லது மாலை நேரத் தேனீரிற்க்கோ அழைக்கின்றேனா?”
  “அவர்களின் மாலை நேரப் பாடசாலை வேலைத்திட்டங்களில் கவனமெடுக்கின்றேனா?”

இது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் ஆம் என்று பதில் அளிப்பீர்களாயின் நீங்கள் உண்மையாகவே ஒரு சிறந்த பெற்றோர் தான்.  பெற்றோர் இது போன்ற கடமைகளைச் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப் படுவதன் காரணம் என்ன?

1. குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கிடையே நல்ல உரையாடலகளை ஏற்ப்படுத்தக் கூடிய ஓர் இடம் சாப்பாட்டு மேசையாகும்.  சாப்பாட்டு மேசையில் பிள்ளைகள் தங்கள் வெளியுலக அனுபவங்களை பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். சாப்பாட்டு மேசையில் பிள்ளைகளின் குறைகளை விமரிசிக்கக் கூடாது.
2.  பாடசாலைப் பிள்ளைகள் பெற்றோரை விட வெளி உலகில் தான் அதிக நேரம் செலவிடுகின்றார்கள்.  எனவே பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வதற்கு அவர்களிடம் ஏராளமான வெளியுலக அனுபவங்கள் இருக்கும்.  பிள்ளைகள் தம் வெளியுலக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது பெற்றோர் அவற்றை ஆவலுடன் செவிமடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிடில் பிள்ளைகள் இலகுவில் விரக்தி அடந்து விடுகின்றார்கள்.
3.  இப்போது எல்லாம் பிள்ளைகள் தொலைக்காட்சி, கணிணி என்பவற்ரோடு அதிக நேரம் செலவிடுகின்றார்கள்.  இந்த நிலமை அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பிள்ளைகளைப் பெற்றோர் தாமே வெளியே அழைத்துச் செல்லும் போது அது நல்ல முன்மாதிரிகையாகவும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகவும் அமையும்.
4.  குறைந்தது ஒரு சில வீட்டு வேலைகளிலாவது பெற்றோருக்கு உதவுவது பிள்ளைகளிற்கு எப்போதும் நன்மை பயக்கும்.  அதனால் வயதிற்ற்குத் தகுந்த வேலைகள் பிள்ளைகளிற்குக் கொடுக்கப்பட வேண்டும்.  ஆனாலும் அளவிற்கு மிகுந்த வேலைப்பளுவைப் பிள்ளைகள் மீது சுமத்தக்கூடாது.
5.  எட்டு  மணிக்குப் படுக்கைக்குச் செல்ல வேண்டும், தமது அறையை அல்லது தமது கட்டிலை தாமே சுத்தம் செய்ய வேண்டும், சாப்பாடு முடிந்ததும் சாப்பாட்டு மேசையைச் சுத்தம் செய்ய வேண்டும் போன்றன சில எளிமையான வீட்டு விதிகள் ஆகும்.  இந்த விதிகளைப் பெற்ரோரும் மதித்துப் பின்பற்ற வேண்டும்.  அப்போது பிளைகளும் வீட்டு விதிகளை சுவாரசியமாகப் பின்பற்ரறுவார்கள்.
6.  பாடசாலைச் சிறுவர்களிற்கு நண்பர்கள் மிக முக்கியமானவர்கள்.  அவர்களை வீட்டிற்கு அழைக்கும் போது அவர்களைப் பற்றி மதிப்பீடு செய்வது பெற்றோருக்கு இலகுவாகிறது.  தம்முடைய நண்பர்கள் பெற்றோரினால் அங்கீகரிக்கப் படும் போது பிள்லைகள் அதிக மகிழ்ச்சி அடைவார்கள்.
7. பாடசாலைக் கல்வி மட்டும் போதும் என்று இருந்து விடலாகாது.  பாடசாலை முடிந்த பின்பு பிள்ளைகள் சங்கீதம், நடனம் உடற்பயிற்சி போன்ற வகுப்புக்களிற்கு (அவரவர் வசதிக்கேற்ப்ப) அனுப்பப்பட வேண்டும்.  ஏதாவது கழகங்களில் அங்கத்தவராக இருப்பதுகூட நல்லது.

பெற்ரோர் மேற்குறிப்பிட்ட விடயங்களைக் கவனமெடுக்கும் போது பாடசாலைப் பிளைகளை வழி நடத்துவதை இலகுவாக உணர்வார்கள்.

No comments:

Post a Comment